ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரது டெல்லி பயணம் அரசியல் அரங்கில் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீதான பிடி இறுகும் நிலையில் அவரின் டெல்லி பயணத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார், இருப்பினும் திமுகவின் தங்கபாண்டியனிடம் அவர் தோல்வி அடைந்தார்.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அதிரடியான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவரின் கருத்துக்களால் சில நேரங்களில் அதிமுக தலைமைக்கே சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை கூட்டினார்.
சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்த போதே பாஜக கொள்கைகளுக்கும், பிரதமர் மோடிக்கு இணக்கமான வகையிலுமே பேசி வந்தார். இதன் காரணமாகவே அவரிடம் இருந்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.