பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்ஸ்ளை கட்டாயமாக வழங்குமாறு அனைத்து தனியார் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் டூயல் ஏர்பேக்குகளை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், நாட்டில் இருக்கும் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் (automakers) தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும் குறைந்தபட்சம் தரமான ஆறு ஏர்பேக்குகளை (airbags) வழங்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.

தனியார், வர்த்தக மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளின் குழுவை சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார். வாகன பொறியியலில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பாராட்டினார்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சொசைட்டியுடன் (Society of Indian Automobile Manufacturers – SIAM) நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் தரமான பாதுகாப்பு அம்சமாக அதிக ஏர்பேக்குகளை சேர்ப்பது மற்றும் வரும் ஆண்டில் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை (flex-fuel vehicles -FFV)அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ட்விட் ஒன்றை வெளியிட்ட நிதின் கட்கரி, அதில் “ஒரு வருட காலத்திற்குள் 100% எத்தனால் மற்றும் பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்ட ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்களை (FFVs) விரைவாக விற்பனைக்கு கொண்டு வருவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்ஸ்ளை கட்டாயமாக வழங்குமாறு அனைத்து தனியார் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

About The Author