உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நகரங்கள் குறித்து வைத்தும், உளவுத்துறை தலைமையகம் மற்றும் தொலைக்காட்சி கோபுரத்தின் மீதும் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘ரஷ்யாவின் தாக்குதல்கள் ஒரு அப்பட்டமான பயங்கரவாதம். பெரிய போர்க்குற்றம். ரஷ்ய தாக்குதல்கள் புனித மத தலங்களை அச்சுறுத்தும். இதை யாரும் மன்னிக்க மாட்டார்கள். யாரும் மறக்க மாட்டார்கள். ரஷ்ய துருப்புக்கள் எங்கள் வரலாற்றை அழிக்க முயற்சிக்கின்றனர்,’ என்றார்.

* ஆப்பிள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை
உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கூகுள், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை குறைத்து கொண்டுள்ளன. தற்போது, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளும் ரஷ்யாவில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் பே செயலியும் முடக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை விட ஆப்பிள் நிறுவனத்தின் நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு கடும் பாதிப்பு  ஏற்படும்.

* மனித கேடயமாக மாறிய மக்கள்
உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையம் அமைந்துள்ளது. இந்நகரை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடத்த உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அணுமின் நிலையத்தை தாக்கினால் அது பேரழிவாக இருக்கும் என்பதால், அணுமின் நிலையத்தை சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்கும் பணியில் உக்ரைன் வீரர்கள் ஈடுபட்டனர். எரிந்த வாகனங்கள், லாரிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் மனித கேடயங்களாக அணுமின் நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்போரில் பல இடங்களிலும் பொதுமக்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி ரஷ்ய படைகளை விரட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை போரில் 6,000 ரஷ்ய வீரர்கள் பலியான நிலையில், உக்ரைனில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* எஸ்-400 ஏவுகணை டெலிவரி பாதிக்காது
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 என்ற அதிநவீன ஏவுகணையை இந்தியா ரூ.48 ஆயிரம் கோடி செலவில் வாங்குகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி, நாட்டின் பாதுகாப்புக்காக இந்தியா இதை வாங்குகிறது. உக்ரைன் போரால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் தொடர்ந்து பொருளாதர தடை விதித்து வருவதால், எஸ்-400 விநியோகம் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறுகையில், `உக்ரைனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது, பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைப்பது குறித்து இந்தியாவுடன் ரஷ்யா தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால், இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணைகளை வழங்குவதில் எந்த தடையும், தாமதமும் ஏற்படாது,’ என்று தெரிவித்தார்.

* தங்கமே… என் தங்கமே…
பல்வேறு நாடுகளின் பொருளாதார தடையால் பாதித்துள்ள ரஷ்ய அதிபர் புடின், இதில் இருந்து நாட்டை மீட்பதற்கு எண்ணெய், தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சியை நம்பி உள்ளார். இது குறித்து ரஷ்ய நிதித்துறை முன்னாள் அதிகாரிகள் கூறுகையில், ‘எண்ணெய், காஸ் விற்பனை, கையிருப்பில் உள்ள தங்கம் ஆகியவற்றை புடின் நம்பி உள்ளார். சிறிய வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதும், கிரிப்டோ கரன்சி பரிமாற்றமும், சீனாவின் உதவியும், பொருளாதார தடையில் இருந்து தன்னை காப்பாற்றும் என ரஷ்யா நம்புகிறது,’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

About The Author