புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பிரான்ஸ் கலைக் குழுவினரின் ராட்சத பொம்மலாட்ட நிகழ்ச்சி, சுற்றுலா பயணியரை பெரிதும் கவர்ந்தது.

புதுச்சேரியில் 2019ம் ஆண்டு, ‘ராந்தி வூ’ என்ற பெயரில் பிரெஞ்சு கலை, பண்பாட்டு சந்திப்பு நிகழ்ச்சி, பிரெஞ்சு துணை துாதரகம் சார்பில் துவக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்துள்ளதால், பிரெஞ்சு கலை நிகழ்ச்சி மீண்டும் துவக்கப்பட்டது. இதன்படி, இரண்டாம் ஆண்டு பிரெஞ்சு கலை, பண்பாட்டு சந்திப்பு நிகழ்ச்சி, கடற்கரை சாலையில் நேற்று துவங்கியது.

இதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 பேர் கொண்ட, ‘லே கிரேண்ட் பர்சன்ஸ்’ குழுவினர் ராட்சத பொம்மை வடிவில் கடற்கரை சாலையில் உலா வந்தனர்.விதவிதமான மெகா உருவ பொம்மையில் வந்த கலைஞர்களை சுற்றுலா பயணியர், பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.பிரான்ஸ் கலைஞர்கள் கூறுகையில், ‘மக்களை மகிழ்விக்கும் வகையிலான இந்நிகழ்ச்சியை மக்களோடு கலந்துரையாடி, விளையாடி, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வடிவமைத்து உள்ளோம்.

‘இந்நிகழ்ச்சி குழந்தைகள், பெரியோர் என வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனர்.பிரெஞ்சு கலை நிகழ்ச்சி, வரும் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இசை, நாடகம், நவீன சர்க்கஸ் என மொத்தம் 12 வகையான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author