உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!!!

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது கொரோனா தொற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

விழிப்புணர்வு

கொரோனா இறப்புகளை தவிர்ப்பதற்கு தடுப்பூசியே அடிப்படை என்பதை கருதி மாவட்ட வாரியாக தடுப்பூசி போட தகுதியானவர்களில், தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் தொடர்ந்து தமிழ்நாட்டில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

அதன் விவரம் வருமாறு:-

* நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

* தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் பேர் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி பேரை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அந்த பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படக்கூடிய ‘மெகா’ தடுப்பூசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் பின்பற்றவேண்டும்

* மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட கலெக்டர்கள் கவுரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.

* பொது சுகாதார வல்லுனர்கள் ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின்படி மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பை தொடர்ந்து பின்பற்றவேண்டும்.

* பொது சுகாதார வல்லுனர்கள் கூறிய வழிமுறைகளான கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றவேண்டும்.

கலந்துகொண்டோர்

கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளரும், சிறப்புப் பணி அலுவலருமான பி.செந்தில் குமார், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர். டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.