உக்ரைனில் படித்து வந்த 15 ஆயிரம் மாணவர்களும், அங்கு பல்வேறு தொழில்களுக்காகவும், வேலை செய்வதற்காகவும் சென்ற 5 ஆயிரம் இந்தியர்களும் போரினால் சிக்கினர். அவர்களை அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசு சிறப்பு விமானங்களையும், விமானப்படை விமானங்களையும் பயன்படுத்துகிறது. இந்த நடவடிக்கையின் காரணமாக இதுவரை 9,000 மாணவர்களும், இந்தியர்களும் பத்திரமாக நாடு திரும்பி உள்ளனர். மற்றவர்களையும் மீட்க துரித வேகத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உக்ரைன், ரஷ்யா மட்டுமின்றி அதை சுற்றியுள்ள அண்டை நாடுகளும் இந்தியாவுக்கு நட்பு நாடுகள் என்பதால், இவர்களை மீட்பதில் இந்தியாவுக்கு பெரியளவில் பெரிய சிரமம் எதுவும் ஏற்படவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 31 விமானங்களை இயக்கி, 6,300 ஆயிரம் மாணவர்கள், இந்தியர்களை மீட்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு நேற்று தெரிவித்தது.

* ராகுல் காந்தி கேள்வி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், `உக்ரைனில் இருந்து எத்தனை மாணவர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டனர்? இன்னும் எத்தனை பேர் அங்கு சிக்கி தவிக்கின்றனர்? அங்குள்ள மாணவர்களை தாய்நாடு அழைத்து வர என்னென்ன திட்டங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன? போன்றவை குறித்து ஒன்றிய அரசு மாணவர்களின் பெற்றோருக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

* அமெரிக்காவிலும் பறக்க தடை
ரஷ்யாவின் விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறப்பதற்கு ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு அதிபர் பைடனும் நேற்று தடை விதித்தார். இதன் காரணமாக, ரஷ்யாவின் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

About The Author