உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடுக்கடுக்காக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவின் மிக பெரிய வங்கியான சென்டிரல் வங்கியின் வெளிநாட்டு சொத்துகளும், அதிபர் புடின்  மற்றும் அவருக்கு நெருக்கமான பல நபர்களின் வங்கி கணக்குகளும், சொத்துகளும் முடக்கப்பட்டு உள்ளன. இந்த தடைகள் காரணமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. அதன் ரூபிள் கரன்சியின் மதிப்பும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மற்ற பொருளாதார தடைகளை மட்டும் விதித்துள்ள போதிலும், ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், காஸ் ஆகியவற்றை மட்டும் இதர நாடுகளுக்கு வினியோகம் செய்வதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அனுமதித்துள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவுக்காக இந்நாட்டை சேர்ந்த எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த எம்பி.க்கள் அதிபர் பைடனை கடுமையாக விமர்சித்துள்ளனர். அவரின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் கிளப்பியுள்ளன. ‘ரஷ்யாவின்  எண்ணெய், காஸ் ஏற்றுமதிக்கு  அமெரிக்கா இதுவரை தடை விதிக்கவில்லை. அதன் மீது தடை விதிக்கப்பட்டிருந்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, ரஷ்யாவின் எண்ணெய், காஸ் ஆகியவற்றின் மீது உடனடியாக தடை விதிக்க வேண்டும்,’ என குடியரசு கட்சி எம்பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* புடின் தவறு
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் உரையாற்றிய பைடன், `உக்ரைன் மீதான ரஷியாவின் போர் திட்டமிடப்பட்டது, நியாயமற்றது, மன்னிக்க முடியாதது. ரஷ்யா சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. இதற்கான விலையை அது கொடுக்க வேண்டியிருக்கும். போரை நிறுத்துவதற்கான தூதரக அளவிலான முயற்சிகளை புடின் நிராகரித்தார். உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் தலையிடாது, அவற்றை பிரித்து விடலாம் என்று நினைத்தார். புடின் தவறிழைத்து விட்டார். நாங்கள் எதையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம்,’ என தெரிவித்தார்.

* முதல் கட்டமாக 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்
உக்ரைன் போரால் பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் விலை உயரக் கூடிய வாய்ப்பு இருப்பதால், அதனை தவிர்க்கும் பொருட்டு, தனது சேமிப்பில் இருந்து 3 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை விடுவிக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய யூனியன் ஆதரவுடன் 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெயை பெட்ரோலிய சேமிப்புகளில் இருந்து வெளியிட ஏற்கனவே ஒப்புதல் அளித்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இதில் 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்யை வினியோகிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்து கையெழுத்திட இருப்பதாக தெரிவித்தார். இருந்த போதிலும், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 5.24 அமெரிக்க டாலர் உயர்ந்து, 108.60 டாலாராக நேற்று விற்பனையானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

About The Author