ரஷிய அணி சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை!!

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை அடுத்து, ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்தது. 

இந்நிலையில், ரஷியாவின் தேசிய மற்றும் உள்ளூர் கால்பந்து அணிகள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப் படுவதாக சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன. 
அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் உடனான தனது ஸ்பான்சர்ஷிப்பை ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் முடித்துக்கொண்டது.
பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ரஷியாவுடன், போலந்து விளையாடாது என அந்நாட்டு கால்பந்து சங்கத் தலைவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.