சென்னை: சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்களை வென்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ள பாஜக அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது.

அடிமட்ட அளவில் பாஜகவினர் பொறுப்பில் இருந்தால் தான் மக்களிடம் இன்னும் அதிகமாக கட்சியை கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கும் அண்ணாமலை அதற்கேற்றவாறு வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் வார்டு மெம்பர்கள் இல்லாததால் மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதிகாரிகளோ என்னோட லிமிட்டில் வராது எனக் கூறி புகார் கூறவருபவர்களை தலை கிறுகிறுக்க வைக்கின்றனர்.

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முடித்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான முன்னோட்ட பணிகளை பழனிகுமார் ஐ.ஏ.எஸ். தொடங்கிவிட்டார். இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான நகராட்சிகளை வெல்வதோடு 3 மாநகராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் இருக்கிறது தமிழக பாஜக.

About The Author