சென்னை : சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழக அரசு பரிந்துரைத்த நான்கு இடங்களில், பரந்துார், பன்னுார் என இரு இடங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பரந்துாரில் விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

டில்லி, மும்பை நகரங்களை ஒப்பிடுகையில், சென்னை விமான நிலையம் போதுமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 2004ல் நிலம் தேர்வு மற்றும் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு துவக்கியது.

பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, இதற்கான அரசாணைகள் திருத்தப்பட்டு, புதிய விமான நிலையம் அமைப்பதே நிரந்தர தீர்வு என்ற நிலை உருவானது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே புதிய விமான நிலையத்துக்கான நிலங்களை தேர்வு செய்யும் பணி, 2008ல் துவங்கியது. விமானங்கள் வந்து செல்வதில் தடை எதுவும் இருக்காது என்ற அடிப்படையில், இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.

ஆனால், இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆர்வமின்மை, அழுத்தமின்மை காரணமாக, தமிழக அரசு இதற்கான பணிகளில் தீவிரம் காட்டவில்லை. பின், புதிய விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு நான்கு இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பன்னுார் அல்லது பரந்துார் ஒட்டிய கிராமங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், மதுராந்தகம் அருகே படாளம் போன்ற இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

About The Author