சமூக ஆர்வலர் ஆட்சியருக்கு மனு
தொற்று அதிகரிக்க காரணமாக உள்ள காமராஜர் காய்கனி மார்க்கெட்டை மூடி, தற்காலிக கோவிட் கேர் சென்டராக மாற்றவேண்டும் – சமூக ஆர்வலர் ஆட்சியருக்கு மனு
✍கொரோனா 2ம் அலை நாளுக்கு நாள் பாதிப்புகள், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மக்கள் அதிகமாக கூட்டம் கூடக்கூடிய, நகர மையத்தில் அமைந்துள்ள காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் மாநகராட்சி மற்றும் காவல்துறையின் கட்டுப்பாடுகளையும் மீறி கூட்டம் அதிகமாக சமூக இடைவெளி இன்றி கூடி வருகின்றனர். இதனால் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர், மக்கள் மேம்பாட்டு கழக நிறுவனருமான வழக்கறிஞர் அதிசயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அதில்,
நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்துவருகின்றேன். மேலும் மக்கள் மேம்பாட்டு கழகம் என்ற சமூக அமைப்பின் நிறுவன தலைவராக இருந்து சமூகப் பணிகள் செய்துவருகின்றேன். நான் கடந்த 8.5.2020 மற்றும் 15-06-2020 அன்று ஆகிய தேதிகளில் தூத்துக்குடி - பாளையங்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள காமராஜர் காய்கனி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் மொத்த கொள்முதல் சந்தையினை போக்குவரத்து மிகுதியாக உள்ள தூத்துக்குடி நகர்புறத்திலிருந்து புறவெளி பகுதிக்கு மாற்றம் செய்யக்கோரி மனு அளித்திருந்தேன். இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக விசாரனை செய்து 17 கடைகளுக்கு அனுமதி பெற்றுவிட்டு 137 கடைகள் அனுமதியின்றி நடத்தியதனை அறிந்து மேற்படி சந்தையில் வரி ஏய்ப்பு நடைபெற்றதனை அறிந்து மார்க்கெட்டை மூடியது.மேலும் நான் இது சம்பந்தமாக கடந்த 9.5.2020 அன்று மேற்படி காய்கனி சந்தை குறித்த விபரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல்களாக கேட்டேன். மாநகராட்சி நிர்வாகம் எனக்கு C3/1139/2020 என்ற கடிதப்படி 23.6.2020 அன்று மேற்படி காய்கனி சந்தை அமைந்துள்ள மாநகர வார்டுஎண் 4 பிளாக் 22 நகரளவை எண் 3476/1, 2, 3, 4, 5, 6, 7, 8 வார்டுஎண் 4 பிளாக் 21நகரளவை எண் 3468/4, 5 மொத்த விஸ்தீரணம் 0.74.72 ஏர் நிலம் அரசு புஞ்செய் நிலம் என்றும், மேற்படி மார்க்கெட் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளதாகவும், மேற்படி நிலத்தினை குத்தகைக்கு ஏதும் விடவில்லை எனவும் தகவல்கல் கிடைத்தது. இதனிடையே நான் மேற்படி காய்கனி சந்தையினை நிரந்தரமாக மூடி அரசு மேற்பார்வையில் மார்க்கெட் அமைக்க வேண்டும் என மனு அளித்ததினை பரிசீலனை செய்ததின் விளைவாக கூட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி சந்தையினை போல புதியதாக வ.உ.சி ?கல்லூரி அருகில் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சந்தைகளை அரசு அமைத்தது. தற்போதுள்ள கொரோனா தொற்று இரண்டாம் கட்ட நிலையில் மேற்படி சந்தையில் எவ்வித அரசு ஒழுங்குமுறையினையும் பின்பற்றாமல் திரும்பவும் கூட்டம் அலைமோதி வருகின்றது. அரசுக்கு சொந்தமான நிலத்தில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் அமைந்துள்ள காய்கனி சந்தையினை நிரந்தரமாக மூடி அதில் 500 படுக்கை வசதியுடைய தற்காலிக கோவிட் கேர் சென்டர் எனும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்தினை உருவாக்கினால் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று படுக்கை தட்டுப்பாட்டினை போக்கலாம்.
ஆகவே உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான மேற்படி நிலத்தில் அமைந்துள்ள காய்கனி சந்தையினை அப்புறபடுத்தி இந்த நிலத்தினை அரசு கையகப்படுத்தி தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு காய்கறி மொத்த கொள்முதல் சந்தையினை தூத்துக்குடி புற நகர் பகுதிக்கு மாற்றம் செய்து, மேற்படி நிலத்தில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு மையமாக மாற்றி மக்கள் நலனினை காக்க வேண்டும்படி தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் SS.சக்திவேல்