“ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்”
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்” என்று தெரிவித்தது.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, “ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு அதை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு போகவே மற்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் இவை தீர்மானங்களாக கொண்டு வரப்பட்டன. இந்த தீர்மானம் பிரமாண பத்திரமாக தயாரிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அந்த பிரமாண பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ் வரராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த விசாரணை நடத்தியது.
அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் தயாரித்து வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் பிரமாண பத்திரமும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசு 2 கோரிக்கைகளை முக்கியமாக தெரிவித்து உள்ளது. ஒன்று ஸ்டெர்லைட் ஆலையில் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது. 2-வது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தர வேண்டும் என்று கூறி உள்ளது.
வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடும் போது கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையின் மீது முழு நம்பிக்கை இல்லை. அந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது. தூத்துக்குடியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடங்களில் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபட கூடாது. இதை அரசு அமைக்கும் குழு கண்காணிக்கும். இந்த குழுவில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அந்த பகுதி மக்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
இந்த குழு சம்பந்தப்பட்ட ஆலையையும், அங்கு ஆக்சிஜன் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்கும் என்றார்.
இதற்கு வேதாந்தா நிறுவன வக்கீல் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடும்போது, “கண்காணிப்பு குழுவில் ஆலை பகுதி மக்கள் இடம் பெற கூடாது. ஏற்கனவே அந்த பகுதி மக்களால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துள்ளோம்” என்றார்.
அதை கேட்ட நீதிபதிகள், “கண்காணிப்பு குழுவில் அரசு அதிகாரிகள், நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடம் பெற செய்யலாமே. அந்த குழுவினர் உள்ளூர் குழுவில் உள்ளூர் பகுதி மக்களும் இடம் பெற வேண்டும்” என்று வற்புறுத்தினர்.
ஆனால் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வக்கீல், “வேதாந்தா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு ஆதரவாக வாதிட்டார். கண்காணிப்பு குழு மக்களிடம் பேசட்டுமே என்று யோசனை தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் நிலவும் கடினமான சூழல் தவிர்க்கப்பட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு வக்கீல் கண்காணிப்பு குழுவில் உள்ளூர் பகுதி மக்கள்இடம் பெற தேவையில்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வக்கீல், “கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்களும் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த நேரத்தில் தேவையில்லாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை விரும்பவில்லை.
கண்காணிப்பு குழுவில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்பது பற்றி கோர்ட்டு உத்தரவிடலாம்” என்றார்.
அடுத்து ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தங்களுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசும், தமிழக அரசும் சொந்தம் கொண்டாடியது.
தமிழக அரசு வக்கீல் வாதிடும்போது, “உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மாநிலத்தின் தேவைக்கு போக மீதியை மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம்” என்றனர்.
ஆனால் மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. “ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனுக்கு தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது.
உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும். தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் தட்டுப்பாட்டை அறிந்து மத்திய அரசே பிரித்து வழங்கும்” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஆலையின் நிர்வாகம், இயக்கம் ஆகியவை அரசின் கண்காணிப்பில் இருக்கலாம். ஆனால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கு வதை தடுக்க கூடாது.
ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடமே வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது” என்றனர்.
வேதாந்தா குழுமம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும் போது, “அனுமதி கொடுத்ததும் 10 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பதற்கு அனுமதிக்கிறோம்.
ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவை தேசிய சுற்றுச்சுழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும்.
மேற்பார்வை குழுவில் உள்ளூர் மக்கள் 2 பேரை இடம் பெற செய்யலாம். இது தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசித்து உள்ளூர் மக்களை குழுவில் இணைத்து கொள்ளலாம்.
உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க இயலாது. மாநிலங்களுக்கு தேவையான அளவை மத்திய அரசே முடிவு செய்யும். மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசே பிரித்து அளிக்கும்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும்தான். வேதாந்தா குழுமத்தின் வேறு எந்த ஆதாயத்துக்காகவும் அல்ல.
ஆக்சிஜன் தயாரிப்புக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.
ஆலைக்குள் செல்பவர்கள் விபரங்களை வேதாந்தா நிறுவனம் கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
செய்தியாளர்.தமீம்அன்சாரி..
தமிழ் மலர்.மின்னிதழ்