ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு தட்டை!

பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருக்கும் நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களைத் தெரியப்படுத்தி, அவர்களுக்குப் பிடித்த உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதற்கு இந்த கேழ்வரகு இனிப்பு தட்டை உதவும். ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்றது. புத்துணர்ச்சித் தருவது.

எப்படிச் செய்வது?

ஒரு கப் ராகி (கேழ்வரகு) மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த ராகி மாவுடன் அரை கப் பொரிக்கடலை மாவைச் சேர்த்து நன்றாகச் சலித்துக் கொள்ளவும். அரை கப் பொடித்த வெல்லத்தை அரை கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். சலித்த மாவுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், இரண்டு டேபிள்ஸ்பூன் எள்ளு, ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைக்கவும். ஓர் அகலமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

சத்தான, சுவையான இந்த ராகி இனிப்பு தட்டை அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது. உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்துக்கும் உதவும்