50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வேண்டும் – கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கும்படி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில், கேரளாவுக்கு உடனடியாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கும்படி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனுக்கு கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவுக்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை 56 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தடுப்பூசிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்பதால் கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ரசாக்
தமிழ்மலர் மின்னிதழ்