பேச்சுவார்த்தைக்கு தயார் – விவசாய அமைப்புகள்

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 137 நாட்களாக அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் பல்வேறு முறைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.அதன்படி வரும் ஏப்ரல் 13ம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசியலமைப்பு பாதுகாப்பு தினம் மற்றும் கிசான் பகுஜன் ஒற்றுமை நாள் ஆகியவற்றை அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த் நிலையில்  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது டுவிட்டரில் 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்’’ எனக் கூறி  இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். கடந்த ஜனவரி 22-ம் தேதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராகவுள்ளோம்.

ஆனால் மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்