பங்குனி உத்திரம்
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
இந்நாளின் சிறப்பு
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர்,
ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
திருவாவினன்குடியின் (பழனி) பெருமை :
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.
வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்