நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 54
உப்பு சுவை வரிசையில் உடலுக்கு நன்மை பயக்கும் பீர்க்கங்காய் அல்லது துரய் பற்றி விரிவாக காண்போம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உடலுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது. இது ஒரு கொடியாகும், அதன் பழங்கள், இலைகள், வேர்கள் மற்றும் விதைகள் அனைத்தும் நன்மை பயக்கும் தன்மை கொண்டவை. பீர்க்கங்காயின் விதைகள் பேதியை தடுக்கும் என்பதால் பேதிமருந்து போல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து பெறப்படும் எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் இலைகள் பொடிக்கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும். மேலும் கண் தொடர்பான வலிக்கு பீர்க்கங்காயின் சாறு பயன்படும். பீர்க்கங்காயின் வேரானது நீர்க் கோர்வைக்கு உகந்ததாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுரையில் பீர்க்கங்காயின் நன்மைகளுடன் மற்ற முக்கியமான தகவல்களையும் காண்போம்.
நார்ச்சத்து மிகுந்த இந்தக் காய், குறைந்த கலோரிகளை கொண்டது. ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன.
செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்
பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம்.
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும். ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.
நன்மைகள் அதிகமாக உள்ள பீர்க்கங்காயின் சில பக்க விளைவுகள் பின்வருமாறு
இது கர்ப்பத்தில் பாதுகாப்பாக கருதப்படவில்லை. பீர்க்கங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஒரு மோசமான விளைவைக் கொண்டுள்ளது.
இதனை கர்ப்ப காலத்தில் எடுத்துகொள்ள எண்ணினால் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ளவும்.
அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு ஒவ்வாமையை இது ஏற்படுத்தும்..
அதன் பக்கவிளைவுகள் மிகக் குறைவு. நீங்கள் பீர்க்கங்காயை சமைத்து சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அதன் சாற்றை உட்கொள்ளலாம். அதே நேரத்தில், பீர்க்கங்காயால் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், அதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.
ஆரோக்கியம் மிகுந்த பச்சைக் காய்கறிகளில் பயன்களை பகுத்தறிந்து அவற்றை உணவுடன் சேர்த்து உண்டு நமது ஆரோக்கியத்தை பேணி காப்போமாக…..
எதையும் வருமுன் காப்போம்…! நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:-சங்கரமூர்த்தி…. 7373141119