இன்சமாம் உல் ஹக் வியப்பு
இந்திய அணியிடம் இளம் வீரர்களை தயாரிக்கும் ‘மிஷின்’ இருக்கிறது” – இன்சமாம் உல் ஹக் வியப்பு
இந்திய அணியின் இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்,
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் குவித்தனர். இளம் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், டி.நடராஜன் ஆகியோர் தங்கள் அறிமுக ஆட்டங்களிலேயே முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ரிஹப் பண்டின் பேட்டிங் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் இளம் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், க்ருனால் பாண்டியா என அனைவரும் தங்கள் பங்கிற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய இளம் வீரர்களின் செயல்பாட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது;-
“இந்திய அணி ஏதேனும் ‘மிஷின்’ வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 பிரிவுகளுக்கும் சிறந்த, திறமையான இளம் வீரர்களை தயாரித்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அறிமுக வீரர்களான க்ருனால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா சிறப்பாக விளையாடினர். இதன் மூலம் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் பொறுப்பாக விளையாடி தங்களின் இடத்தைத் தக்கவைக்காவிட்டால், அந்த இடம் இளம் வீரர்களுக்குச் சென்றுவிடும் என்ற தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியத் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு இளம் வீரர் சிறந்த பங்களிப்பை அளித்தார். கடந்த 6 மாதங்களாக இந்திய அணியின் செயல்பாடு தங்களின் இளம் வீரர்களால் சிறப்பாக இருந்து வருகிறது.
இந்திய அணி முதல்தரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள், வலிமையான இங்கிலாந்து அணியைக்கூட எளிமையாகக் கையாள்கிறார்கள். இந்திய அணிக்கு விக்கெட் தேவையெனும்போது, முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான் மீண்டும் கூறுகிறேன், ஒவ்வொரு பிரிவுக்கும் வீரர்களை தயாரிக்கும் மிஷினை இந்தியா கண்டறிந்துள்ளது.” இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.