“குன்னக்குடி வைத்தியநாதன்”

தமிழ்த்திரையிசை மேதை “குன்னக்குடி
வைத்தியநாதன்”அவர்களின் 86 வது அகவை இன்று…..!(02.03.2021)

திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் பல வகையில் தங்களின் திறம் காட்டி இசையுலகினில் கோலோச்சினர்.இவர்களில்
வெறும் வயலின் வாத்யத்தை பெரும்பாலும் உபயோகித்து பேர் வாங்கியவர்
அமரர்.திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .
1935.03.02 அன்று தமிழ்நாடு குன்னக்குடியில்
பிறந்தார். இவரின் தந்தை பெயர் ராமசாமி சாஸ்திரி. பானுமதி,ராமகிருஷ்ணன்,ஸ்ரீனிவாசன்
,பாலசுப்ரமணியம், சேகர், ஸ்ரீதர் என ஆறு வாரிசுகள்.இவர் இசையமைத்த திரைப்படங்கள் யாவன:
வா ராஜா வா,திருமலைத்தென்குமரி,
நம்மவீட்டுதெய்வம்,கண்காட்சி,அகத்தியர்,
வாழையடி வாழை,தெய்வம்,
அன்னை அபிராமி,ராஜ ராஜசோழன் ,திருமலைத்தெய்வம்,
காரைக்கால் அம்மையார்,சிசுபாலன்,குமாஸ்தாவின் மகள்,
மணிமண்டபம்,மனிதனும் தெய்வமாகலாம்,
மேல் நாட்டு மருமகள்,நவரத்தினம்,கந்தர் அலங்காரம்,ராகபந்தங்கள்,தோடிராகம்,
உலா வந்த நிலா (தயாரிப்பு,இயக்கம்,இசை).தோடிராகம் படத்தில் இவர் பாடிய “கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கிலே ” இன்று வரை ஜனரஞ்சகமான பாடல்.
“ராஜ ராஜ சோழன்” படத்தில் இவரின் பிடிவாதத்தால் சிவாஜி கணேசன் வசனம் பேச டி.ஆர்.மகாலிங்கம் “தென்றலோடு உடன் பிறந்தால் செந்தமிழ்  பெண்ணாள் “என்ற அருமையான பாடல் உருவானது.
“மேல் நாட்டு மருமகள் “படத்தில் ஓர் ஆங்கில பாடலைப் பாடுவதற்கு மும்பைப் பாடகி
உஷா உதூப் அழைக்கப்பட்டார். குன்னக்குடி வைத்தியநாதனின் தோற்றத்தை பார்த்து இவரா என் பாடலுக்கு இசையமைக்கிறார் என ஏளனமாக சொல்ல,பாடல் மேலை நாட்டுப்பாணியில் அருமையாக உருவான பின் குன்னக்குடி வைத்தியநாதனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டார்
உஷா உதூப்.கலைமாமணி,சங்கீத நாடக அக்கடமி,பத்மஸ்ரீ,கர்நாடக இசைஞானி,
சங்கீத கலாசிகாமணி,ராஜா சாண்டோ போன்ற விருதுகளை பெற்றவர் குன்னக்குடி வைத்தியநாதன். இலங்கைக்கும் விஜயம் மேற்கொண்டு இசைக்கச்சேரி வழங்கியுள்ளார்.இவரின் கரங்களில் வயலின் பேசி விளையாடும். “தெய்வம்” படத்தில் இவரின் இசையில் உருவான மதுரை சோமு அவர்கள் பாடிய “மருத மலை மாமணியே முருகையா “பாடலைக் கேட்கும் போது  முருகனே நேரில் வந்தது போல் இருக்கும். எம்ஜிஆரின் “உலகம் சுற்றும் வாலிபன் “படத்தில் முதலில் இவர்தான் இசையமைக்க இருந்தார் ,பின்னர் கவியரசு கண்ணதாசனின் யோசனைக்கமைய எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.இவரது இசையில் உருவான “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் “என்ற பாடல் பின்னாளில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் உருவான “கந்தன் கருணை”படத்தில் இணைக்கப்பட்டது.
இசை கேட்டால் புவியசைந்தாடும் இவர் கைகளில் வயலின் விளையாடும். இயக்குனர் ஏ.பி.நாகராஜன் படங்களுக்கும்,சாண்டோ  சின்னப்பா தேவர் படங்களுக்கும்  பெரும்பாலும் இசையமைத்தவர்கள் குன்னக்குடி வைத்தியநாதனும்,
கே.வி.மகாதேவனுமாகத்தான் இருப்பார்கள். இறைவனால் இசை வரம் பெற்ற வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் 2008.செப்டம்பர்  08 அன்று சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக அமரரானார்.
வயலினை கண்டுபிடித்தவருக்கு குன்னக்குடி வைத்தியநாதனால்தான் இசையால் உயிர் கொடுக்க முடிந்தது. ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத இம்மகா கலைஞனை இந்நாளில் போற்றுவோமாக….!
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை .