ஒத்தடம்… இதம்…சுகம்…நலம்!
ஒத்தடம் கொடுப்பதைப் பாட்டி வைத்தியம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து வகை மருத்துவ முறைகளிலும் ஒத்தடம் (Fomentation) என்பது மிகச்சிறப்பானதொரு சிகிச்சை முறையாக உள்ளது.
ஒத்தடம் கொடுக்கப்படும் முறை மற்றும் பயன்கள்
நமது உடலில் உள்ள தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலிகளுக்கு நிவாரணமாகவும், வாயுவால் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் முக்கியமான ஒன்றுதான் ஒத்தட சிகிச்சை முறை. நோயின் தாக்கம், நோயின் வலிமை, நோய் தாக்கப்பட்ட விதம் மற்றும் நோயாளியின் தன்மை, பலம், வயது போன்றவற்றின் அடிப்படையில் ஒத்தடங்களின் தன்மைகளை குறைத்தோ, அதிகரித்தோ தகுந்த முறைகளில் கொடுக்க வேண்டும்.
மணல், தவிடு மற்றும் கல் உப்பு போன்றவற்றை சூடு செய்து கொடுக்கப்படும் ஒத்தடங்கள் அதிக அளவு நடைமுறையில் இருக்கக்கூடியவை. நொச்சி இலை, நுனா இலை போன்ற வலி நிவாரணி மூலிகைகளை பாத்திரத்தில் போட்டு சூடு செய்து, அதை சுத்தமான காட்டன் துணியில் மூட்டையாகக் கட்டி ஈரமில்லாமல், சூடான முறையில் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு Hot Fomentation என்று பெயர்.
கண்ணின் மேற்புறம் உள்ள தோல் பகுதி, இதயத்துக்கு வெளிப்புறம் உள்ள மார்புப்பகுதி போன்ற மென்மையான உறுப்புகளில் நேரடியாக சூடான ஒத்தடம் கொடுக்கக் கூடாது. அதுபோன்ற இடங்களில் தூய்மையான காட்டன் துணியை வெந்நீரில் நனைத்து, பிழிந்து லேசான சூட்டிலேயே ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
ஈரப்பதத்துடன் கொடுக்கக்கூடிய இந்த முறைக்கு Wet Fomentation என்று பெயர். வலி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, மூலிகைக் குடிநீர் தயார் செய்து, அதை துணியில் நனைத்து ஒத்தடம் கொடுப்பதற்கும் Wet Fomentation என்றுதான் பெயர்.
இதேபோல தோலால் செய்யப்பட்ட பையில்(Animal Bladder) வெந்நீரை நிரப்பி, உறுப்புகளின் நோய் பாதிப்பு தன்மைக்கு ஏற்ப ஒத்தடம் கொடுக்கப்படும் முறையும் உண்டு. இதில் தேவைப்படும்போது சூட்டினைக் குறைப்பதற்கு ஏற்ப அந்தப் பையினைக் காட்டன் துணியால் சுற்றி உலர்ந்த நிலையில் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு Dry Fomentation என்று பெயர்.
உடலின் வெப்பத்தன்மை அதிகமாக இருக்கும்போதும், விஷக்காய்ச்சல் ஏற்படும்போதும் குளிர்ச்சியான ஒத்தடங்கள் கொடுக்கப்படுகிறது. சுத்தமான காட்டன் துணியினை குளிர்ந்த நீரில் நனைத்து, பிழிந்து எடுத்து நெற்றியில் வைப்பதனால், வெப்பம் தணிந்து விஷக்காய்ச்சல் குறைகிறது. இதற்கு Cold Fomentation என்று பெயர். இதுவரை பார்த்த Hot, Wet, Dry, Cold போன்ற நான்கு முறை ஒத்தடங்களின் தன்மைகளை அதிகப்படுத்தி, வலுவான முறையில் கொடுப்பதற்கு Strong Fomentation என்று பெயர்.
வலி நிவாரணி மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மேற்பூச்சு மருந்துகளைப் பயன்படுத்தி பாதிப்பு உள்ள தசைகளில் சூடு ஒத்தடம் கொடுக்கப்படுகிறது. இப்படி ஒத்தடம் கொடுப்பதால், தசைகளில் உள்ள சிறிய துவாரங்கள் விரிவடைந்து, அதன் மூலமாக மருத்துவத்தன்மை உள் இழுக்கப்பட்டு சிறுசிறு ரத்தநாளங்கள் வரை சென்றடைவதன் மூலமாக நோய் பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்வதற்கும், அந்த இடத்தில் உள்ள வாயு, நீர் போன்றவற்றை அப்புறப்படுத்தவும் ஒத்தடங்கள் பெரிதும் உதவுகிறது. இதனால் தசைப்பிடிப்பு, தசைவலி, மூட்டு அழற்சி மற்றும் மூட்டுகளில் சேரக்கூடிய வாயு போன்றவற்றுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது…
தகவல் ராஜவேல் செய்தி ஆசிரியர் நியூ டெல்லி.