ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசும் தொழில் நுட்பம்.

உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம். இதற்கு இடது பக்கத்தில் அருங்காட்சியகமும் வலது பக்கத்தில் அறிவுத்திறன் பூங்காவும் கட்டப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார்.

அருங்காட்சியத்தின் உள்ளே நுழைந்ததும் தத்ரூபமாக ஜெயலலிதாவை கண்முன்னே நிறுத்துகிறது, சிலிகானில் செய்யப்பட்ட சிலை. இதனருகே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற வகையிலான தொழில் நுட்பம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் குழந்தை பருவம் முதல் இறக்கும் முன் வரையிலான புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொடுதிரையில் நாம் தேர்வு செய்யும் கேள்விக்கு, ஜெயலலிதாவே நேரில் வந்து பதில் அளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். நினைவிடத்தின் வலது பக்கத்தில் உள்ள அறிவுசார் பூங்காவில், டிஜிட்டல் திரையில் ஜெயலலிதாவுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். பின்னர் அங்கிருக்கும் கணினியில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் ஜெயலிதாவுடன் எடுத்த செல்ஃபி நம் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சைக்கிளிங் செய்துகொண்டே 2D அனிமேஷனில், ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தெரிந்துகெள்ள முடியும். மேலும் ஜெயலலிதாவுக்கு டிஜிட்டல் முறையில் மலர் அஞ்சலி செலுத்தவும் முடியும். அப்போது நாம் தேர்வு செய்யும் மலர் 2டி திரையில் தோன்றும் ஜெயலலிதா உருவத்தின் மீது உதிர்வதோடு அப்பூவின் வாசனை நம்மை நிஜத்தில் உணரச்செய்யும்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்