இன்று ரதசப்தமி தினம் 7 தலைமுறை பாவங்கள் தீர்க்கும்!

மகாபாரதத்தில் வரும் பீஷ்மருக்காக ரதசப்தமி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ரத சப்தமியை மகா சப்தமியாகவும், சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடலாம். ரத சப்தமி தினம் நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் இந்த ஏழு வகையான பாவங்களும் நீங்கும் என்பது சாஸ்திரங்கள் கூறும் விளக்கம். சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் தென் திசையிலிருந்து வட திசைக்கு நகர்த்தி செல்லும் காலத்தின் துவக்கமாக இந்த ரத சப்தமி அமைந்துள்ளது. சூரிய பகவானின் ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் 12 சக்கரங்களும் 12 ராசிகளையும் குறிக்கும். ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் அளவற்ற நன்மைகளை பெறலாம்.

மேலும் ரதசப்தமியில் விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய எல்லா வகையான பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. தை அமாவாசையில் இருந்து ஏழாவது நாள் வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளில் திருமலை திருப்பதியில் உற்சவர் மலையப்பசாமி ஏழு வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அறிந்தும் அறியாமலும், நம் உடலாலும் உள்ளத்தாலும் இந்த பிறப்பிலும் இதற்கு முந்தைய பிறப்பிலும் நாம் செய்த ஏழு வகையான பாவங்களையும் நீக்கும். ரத சப்தமியில் எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராட வேண்டும்.

பெண்கள் எருக்கன் இலையுடன் அட்சதையை சேர்த்து தலையில் வைத்து நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும்.மேலும் ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது . இந்த நாள் தியானம், யோகா செய்ய வாழ்வில் மேம்பட்ட நிலையை அடைய முடியும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் .திருமலை திருப்பதியில் இந்த நாளில் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. ஒரே நாளில் ஏழு வித வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா வருவார். அடுத்த நாளான பீஷ்மாஷ்டமியில் புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் ,முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்பவர்களுக்கு நிரந்தரமாக சுகமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தகவல் – ரவூப்

தமிழ்மலர் மின்னிதழ்