மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ” தமிழக சட்டசபை தேர்தல் அனைத்துக்கட்சிகளுடன் விவாத கூட்டம் நடைபெற்ற பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களை பிள்ளைகளை போல கருதி பாடம் கற்றுத்தருகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் திறன் தொடர்பான குறைபாடுகள் இல்லை. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்வு அறையில், ஒரு அறைக்கு 25 மாணவர்கள் வீதம் அமரவைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு வருகைதராத பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம்.
தற்போது வரை 98 விழுக்காடு மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். இடைநிற்றல் பிரச்சனை தமிழகத்தில் இல்லை. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது ” என்று தெரிவித்தார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்