ராம்குமார் பா.ஜ.க.உடன் இணைந்தார்.
சென்னை,
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம்குமார், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்தார். அவருடன் அவரது மகனும், நடிகருமான துஷ்யந்தும் வந்தார்.
அவர்கள் இருவரும், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினர். பின்னர் ராம்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளேன். அதற்கு வலிமையான மனிதராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நான் பா.ஜ.க.வில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்வேன்.’ என்றார்.
ராம்குமார், பா.ஜ.க.வில் இணைவது குறித்து அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில், சென்னை கமலாலயத்தில் இன்று மாலை 4 மணியளவில், ராம்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபு வாழ்த்து
தனது அண்ணன் ராம்குமார் பா.ஜ.க.வில் இணைவது குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
அண்ணன் ராம்குமார் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய ரசிகராக இருந்து வருகிறார். அவரின் செயல்பாடுகளை தீவிரமாக பின்பற்றி வருகிறார். எனவே அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.க.வில் இணைவதற்கு விருப்பப்பட்டார். தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்ணன் ராம்குமாரின் அரசியல் பயணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நானும், எனது மகன் விக்ரம் பிரபுவும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் விமர்சனம்
ராம்குமார், பா.ஜ.க.வில் இணைய உள்ளதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவாஜி கணேசன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் தனிப்பட்ட முறையில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்தவர். அவருடைய மகனின் முடிவு சிவாஜி கணேசனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த கூடியதாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்தி – ரசூல்