தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களமிறங்கும் பிரதமர் மோடி!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். அண்மையில் சென்னை வந்திருந்த அமித்ஷா, அரசு விழாவில் பங்கேற்று தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி படுத்திவிட்டுச் சென்றார். அதன்பின் தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜேபி நட்டா இருமுறை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விசிட் அடித்தார். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டதுடன், தமிழக மக்களை கவரும் வகையில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனிடையே வரும் 23, 24 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வேலூர் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுநாள்வரை பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு விசிட் அடித்த நிலையில், தற்போது நேரடியாக பிரதமர் மோடியே களமிறங்கவுள்ளார். தமிழக மக்களிடையே பாஜக செல்வாக்கை அதிகரிக்கும் பொருட்டு, அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். அதன்படி வரும் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமரின் முதல் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அரசு விழாவாக நடைபெறவுள்ளது. அப்போது ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜுன் மார்க்-2’ என்னும் புதிய வகை பீரங்கியை மோடி அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவையையும், தமிழகத்தில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இதுமட்டுமின்றி, ஐஐடி உள்ளிட்ட 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறார். தமிழகம் வரும் மோடி, பாரதியார் கவிதை, திருக்குறள் என புராண கதைகளை பேசி மக்களை கவரும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடியுடன் சில மத்திய அமைச்சர்களும் தமிழகம் வர பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்