போலீசாருக்கு சிறிய ரக கேமராக்களை பயன்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்!

குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசாருக்கு சிறிய ரக கேமராக்களை பயன்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புரம் தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போலீஸ்காரரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கும் போது ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் நீதிமன்றம் வரை போகிறது. அதோடு ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் நடத்துகின்ற போராட்டத்தின் போது ஒரு சிலர் போலீசாரிடம் அத்துமீறி நடந்து கொள்வதால் அதுபோன்ற சமயங்களில் உண்மை நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

எனவே இவ்வகையான சூழலை சமாளிக்கும் வண்ணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் தங்களுடைய சட்டையில் பொருத்திக் கொள்ளும் வகையில் சிறிய ரக கேமரா பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த கேமராவானது முதற்கட்டமாக சென்னையில் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திருச்சி மாநகரில் பணியாற்றும் போலீசாருக்கும் 50 சிறிய ரக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் இந்த கேமராக்களை சட்டையில் பொருத்திக் கொள்ளும் போது தகராறில் நடக்கும் காட்சிகள் அந்த கேமராவில் அப்படியே பதிவாகி விடுகிறது. இதனால் யார் மீது குற்றம் இருக்கிறது என்பது தெளிவாகிவிடும். இதனையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்த சிறிய கேமராக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றுள்ளது. அப்போது போலீசாருக்கு வீடியோ ஒளிப்பதிவு மூலம் இதனை எவ்வாறு பயன்படுத்துவது என தெளிவாக ஒளிபரப்பப்பட்டது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்