நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் _ முன் கூட்டியே முடிக்க திட்டம்.

புதுடெல்லி,

2021-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது

இது புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கம் போல ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார். 

ஜனாதிபதி உரைக்கு பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அமர்வில், 2020- 21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் முதற்கட்ட தொடர் பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்டமாக மார்ச்- 8ல் துவங்கி, ஏப்ரல்- 8 வரை கூட்டத் தொடரை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த பார்லிமென்ட் அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரை இரு நாட்களுக்கு முன் அதாவது பிப்ரவரி 13ல் முடிக்க, அனைத்து கட்சிகளும் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் ஆனாலும், ஏற்கனவே திட்டமிட்டபடி, அலுவல் நேரம் குறையாமல் பார்த்துக் கொள்ளப்படும் என பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, 10 மணி நேரம் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் ரஹ்மான்