மக்களை விரைவில் சந்திப்பேன்?

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர் கொரோனா தொற்று மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிடம் கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ததாக அறிவித்தனர்.

சசிகலா விடுதலையை அ.ம.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், தொடர்ந்து இன்னும் 3, 4 நாட்கள் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார்.

அவர் சிகிச்சை பெறும் கட்டிடத்தின் முன் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து பாதூப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விக்டோரியா மருத்துவமனையை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 30-ந்தேதி சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் பாதிப்பு இல்லை என்றால் அன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 3-ந்தேதி அவர் சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு தமிழக எல்லையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரையில் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க ஊர்வலமாக சென்னைக்கு அவரை அழைத்து வர சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அவர் செல்லும் வழியில் சசிகலாவின் 66 வயதை குறிக்கும் விதமாக 66 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் சென்னை செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களில் வழிபாடு நடத்தவும் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கி முறைப்படி விடுவித்து இருக்கிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதால் அது சம்பந்தமான அனைத்து நடைமுறைகளையும் அவர் பின்பற்றுகிறார்.

சசிகலா என்னிடம் ஒரு தகவலை தெரிவித்தார். விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று அவர் கூறினார். இந்த தகவலை மக்களிடம் சொல்லும்படியும் தெரிவித்தார் என செந்தூர் பாண்டியன் கூறினார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.