திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்!
இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க. வின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை பிரச்சனை குறித்து மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும். போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் மத்திய அரசு மவுனமாக உள்ளது. மத்திய அரசு மவுனம் சாதிக்காமல் உடனே இப்பிரச்சனையில் தலையிட வேண்டும்.1987- ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்த உத்தரவாதத்திற்கு எதிராக மாகாண கவுன்சில்களின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலேயே ஒவ்வொரு அரசும் நடந்துகொண்டிருக்கின்றன.
இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்ட காலத் தாகம். இலங்கையில் 13- வது அரசியல் சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்தத் தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்களும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்