சென்னையில் பிப்ரவரி -18 ,19, தேதிகளில் ஐபிஎல் ஏலம் பிசிசிஐ அறிவிப்பு?
டெல்லி : இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 தொடரின் ஏலம் சிறிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஏலம் வரும் மாதம் 18 அல்லது 19ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா -இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் மாதம் 17ம் தேதி முடியவுள்ளதையடுத்து, 18 அல்லது 19ம் தேதிகளில் ஐபிஎல் ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சிறிய அளவில் ஏலம்
ஐபிஎல் 2021 தொடரின் ஏலம் இந்த ஆண்டு சிறிய அளவில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி தங்களது அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்பை கடந்த வாரத்தில் ஐபிஎல்லின் 8 அணிகளும் வெளியிட்டன.
சென்னையில் ஐபிஎல் ஏலம்
இந்நிலையில் அடுத்த மாதம் 18 அல்லது 19 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 2021 ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த மாதம் 17ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடையவுள்ளது.
விரைவில் பிசிசிஐ முடிவு
தொடர்ந்து அடுத்த இரு தினங்களில் அதாவது பிப்ரவரி 18 அல்லது 19 ஆகிய இரு தேதிகளில் ஒன்றில் ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நடத்தப்படவுள்ள இடம் குறித்தும் பிசிசிஐ முடிவெடுத்து விரைவில் அறிவிக்க உள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர் இதற்கான ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடத்துவதே சிறப்பு
கடந்த ஆண்டில் கொரோனா தாக்கம் காரணமாக ஐபிஎல்லின் 13வது சீசன் யூஏஇயில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. பயோ பபள் விதிமுறைகளுக்கு உட்பட்டு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை சிறப்பாக நடத்திக் கொடுத்தது. ஆயினும் இந்தியாவின் லீக் போட்டியான இதை இந்தியாவில் நடத்துவதே சிறப்பானது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்