தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் பிட்டு குற்றச்சாட்டு


விவசாயிகள். போராட்டத்தில் காலிஸ்தான் கொடிகளை காண்பிக்க சிலருக்கு ரூ.1 கோடி பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் பிட்டு நேரில் சென்றுள்ளார்.  அவரை சிலர் சூழ்ந்து கொண்டனர்.  சிலர் அவரது சட்டையை பிடித்தனர்.  அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை நோக்கி அங்கிருந்த சிலர் குரல் எழுப்பினர்.

இதன்பின்னர் எம்.பி. ரவ்நீத் அங்கிருந்து வெளியேறினார்.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ரவ்நீத், விவசாய தலைவர்கள் அழைப்பின்பேரில் கூட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் சென்றோம்.

ஆனால், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை ஏந்தி கொண்டு, கொரில்லா போர் வீரர்கள் போல் சிலர் எங்களை சூழ்ந்து கொண்டு பதுங்கியிருந்து தாக்கினர்.  விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  அதனால், நாங்கள் எந்த நடவடிக்கையும் தற்பொழுது எடுக்க போவதில்லை.

நான் முன்பிருந்தே கூறி வருகிறேன்.  சில சமூக விரோதிகள், காலிஸ்தானி கொடிகளை ஏந்தியிருக்கின்றனர்.  ஆனால், விவசாய தலைவர்கள் என்ன செய்ய முடியும்?  இதுபோன்ற பெருங்கூட்டத்தில் அவர்களை அடையாளம் காண அவர்களால் இயலாது.

இதுபோன்ற நபர்களுக்கு ரூ.1 கோடி முதல் 80 லட்சம் வரை பணம் கொடுக்கப்பட்டு உள்ளது.  அவர்களிடம் கொடிகளை ஏந்தி செல்லும்படி கூறப்பட்டு உள்ளது.  அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நான் இலக்காகி விட்டேன் என வருத்தமுடன் கூறியுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்