அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்? கசிந்த ராணுவ ரகசியம்?
அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக பைடன் நேற்று பதவியேற்றார். இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, வன்முறைகளை தடுக்கும் வகையில், அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் என்பவர் ஆரம்பம் முதலே தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஆன்லைன் பிரசாரங்களை ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வு போலீஸ் பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன்னை ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர் போல சித்தரித்து இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். எப்.பி.ஐ. ஊழியரை உண்மையான ஐ.எஸ். பயங்கரவாதி என நினைத்து ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் இவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் முதல் அவருடன் தொடர்பில் இருந்து வரும் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் அண்மையில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார்.
மேலும், நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் தனது சதித் திட்டம் குறித்தும் கூறியுள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ராணுவ ரகசிய தகவல்களையும் வழங்கினார். இதையடுத்து எப்.பி.ஐ. ஊழியர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜசின் சதித்திட்டம் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் நேற்று ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.