29-ந்தேதி நாடாளுமன்றம் கூடுகிறது


கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என்று 3 தொடர்கள் நடைபெறும்.

கடந்த ஆண்டு நாட்டில் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 23-ந்தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

அடுத்து நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறுகிற குளிர்கால கூட்டத்தொடர், கொரோனாவுக்கு எதிராக நாடு தொடர்ந்து போராடிக்கொண்டிருந்ததால் நடைபெறவே இல்லை.

இந்தநிலையில் நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக 29-ந்தேதி கூடுகிறது. அன்று இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

இந்நிலையில், கொரோனா நோய்ப் பரவலுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்ற வளாகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார்.

செய்தியாளர் ரஹ்மான்