முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
27–ந்தேதி ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க இருக்கின்றோம். ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கின்றோம், இப்போது வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலினால் கனவை மட்டுமே காண முடியும். மக்களின் ஆதரவோடு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
தி.மு.க. மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. இப்போதும் மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். பதவியில் வந்துவிட்டால், குடும்பம்தான் கண்ணுக்கு தெரியும். மக்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். தன் வீட்டு மக்கள் தான் கண்ணுக்கு தெரிவார்கள்.
நான் ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்-அமைச்சர் ஆனேன் என்று மு.க. ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய அப்பா எட்டிக்குதித்து வந்தா முதல்-அமைச்சர் ஆனார். நான் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். ஆகவே, நான் வந்த வழி நேர்வழி. நீங்கள் வந்த வழி குறுக்கு வழி. அதனால்தான் உங்களுக்கு குறுக்கு புத்தி இருக்கிறது.
நான் பதவியேற்று மூன்று ஆண்டுகள் 11 மாதங்கள் ஆகின்றது. இந்தக் காலகட்டத்தில் துறைகள் வாரியாக பல விருதுகளை பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லையென்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது, எப்போதும் மின்வெட்டுதான். தடையில்லா மின்சாரம் கொடுக்கக்கூடிய அரசு அம்மாவின் அரசு. உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கும் விருதுகளைப் பெற்றுள்ளோம்.
இந்தப் பகுதியில் சியட் டயர் கம்பெனி நாங்கள் உருவாக்கித் தந்ததன் வாயிலாக லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஏறத்தாழ 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதனால், தமிழகத்தில் படிப்படியாக தொழிற்சாலைகள் தொடங்குகின்ற காட்சியைக் காண முடிகிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலா 5 லட்சம் நபர்களுக்கு என மொத்தம் 10 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று சொல்கிறார். எந்த இடத்திற்கும் வாருங்கள். ஆனால், துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும். யாராவது எழுதிக் கொடுத்ததை படிக்கக்கூடாது. எந்தத் துறையில் என்னென்ன என்று சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாலை டெண்டர் ஒன்றை திருநெல்வேலியில் கேன்சல் செய்துவிட்டார்கள். அதுகூட தெரியாமல், அதில் ரூ.700 கோடி ஊழல் என்று சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் கவர்னரிடம் பொய் அறிக்கை கொடுத்துள்ளார். படித்துப் பார்த்தால்தானே தெரியும், நாட்டைப் பற்றியே தெரியாத ஒரு தலைவர் தி.மு.க. தலைவர். அப்படியானால் எவ்வளவு எரிச்சலுடன் அவர் உள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கோரப் பசியில் இருக்கிறார். சிறிது ஏமாந்தாலும் மக்களையே சாப்பிட்டுவிடுவார்.
எப்போதும் முதல்-அமைச்சர் என்று ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார். முதல்-அமைச்சர் பதவியை மக்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நான் எப்போதும் முதல்-அமைச்சர் என்று சொன்னதே கிடையாது. மக்களே முதல்-அமைச்சர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
செய்தியாளர் ரஹ்மான்