நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2 – ரோகித் அரை சதம்
:
இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன் எடுத்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
94 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து இருந்தது. லபுஷேன் 47 ரன்னிலும், ஸ்டிவ் சுமித் 29 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 197 ரன்கள் முன்னிலை, கைவசம் 8 என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.
3-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.லபுஷேன் 82 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 17-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 9-வது அரை சதமாகும்.
இந்த ஜோடியை நவ்தீவ் சைனி பிரித்தார். லபுசேன் 73 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த மேத்யு வாடே (4 ரன்) விக்கெட்டையும் சைனி கைப்பற்றினார். 148 ரன்னில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது.
முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்டீவ் சுமித் இந்த இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது 30-வது அரை சதத்தை பதிவு செய்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் சுமித் 81 ரன்னில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அப்போது ஸ்கோர் 208 ஆக இருந்தது.
6-வது விக்கெட்டான கேமருன் கிரீன் – கேப்டன் டிம்பெய்ன் ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிரீன் தனது அரை சதத்தை எடுத்தார். 116 பந்துகளில் 7 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை தொட்டார். அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.
இருவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியா ரன்களை தொடர்ந்து குவித்தது. 86-வது ஓவரில் அந்த அணி 300 ரன்னை குவித்தது.
அதிரடியாக ஆடிய கேமரூன் கிரீன் 84 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதோடு ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை முடித்து கொண்டது. அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. டிம்பெய்ன் 39 ரன்னில் ஆட்டம் இழக்காமல் உள்ளார். அஸ்வின், சைனி தலா 2 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
407 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஷூப்மன் கில் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கியது. சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடியை ஹசில்வுட் பிரித்தார். ஷுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்த போது ஹசில்வுட் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.
அந்த நம்பிக்கை ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. பந்துகளை தடுமாறாமல் விளையாடிய அவரை கம்மின்ஸ் ஷாட் பால் மூலம் வெளியேற்றினார். ரோகித் சர்மா 98 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
இதனையடுத்து புஜாரா ரகானே ஜோடி நிதானமான ஆட்டத்தை ஆடினர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்தது. ரகானே 4 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி இன்னும் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ளது.
செய்தியாளர் ரஹ்மான்