பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “பூமி”அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ,தற்போதைய வர்த்தக நடவடிக்கைகளால் விவசாயத்துறையும்,நீர்வளமும் எவ்வாறு நலிவடைந்து வருகின்றது என்பதை உயிரோட்டமாக காட்டும் திரைப்படம் ஆகும். கோர்ப்பரேட்காரர்கள் மண் வளங்களையும்,நிலத்தடிநீர் நிலையைகளையும் எவ்வாறு சுரண்டி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர்,
அதற்கு அரசியல் வாதிகள் எவ்வாறு துணை போகின்றனர் என்பதை ஓர் விவசாய நண்பனாக,தேச பற்றாளனாக,அவ்விடத்தில் இருந்து படத்தை உணர்ச்சி பூர்வமாக இயக்கியுள்ளார் இயக்குனர் D.லக்ஸ்மண்.பூமி சம்பந்தப்பட்ட திரைக்கதை
என்பதால் படத்திற்கும்,நாயகன் ஜெயம் ரவிக்கும் “பூமி “எனப் பெயர் இட்டிருப்பது மிகப்பொருத்தம்.இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை பூண்டோடு வேரறுக்க நினைக்கும் சில தீய சக்திகளின் செயற்பாடுகளை ரசிகர்களுக்கு புரியும் வண்ணம் காட்சிகளையும்,
உரையாடல்களையும் அமைத்திருப்பது படத்திற்கு மற்றொரு வழு.படத்தில் வரும் பின்னணி இசையை இசையமைப்பாளர் D.இமான் வித்யாசமான ஒலியமைப்பில் அமத்திருக்கும் விதம் அருமை. பாத்திரத்தோடு ஒன்றி தனது வேடத்தை நன்குணர்ந்து திறம்பட செய்திருக்கின்றார் படத்தின் கதாநாயகன்”ஜெயம் ரவி”.கத்தி கலாட்டா பண்ணாமல் அமைதியாக,நல்ல கெட்டப்பில் வில்லன் வேடத்தில் அசத்தியுள்ளார் ஹிந்தி நடிகர் ரொனிட்ரோய். பண்பட்ட நடிப்பில் அரசியல் வாதியாக மிரட்டிய ராதா ரவியின் இயல்பான நடிப்பு அருமை.
ஜோன் விஜய்யும் தனது பாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளார். கதாநாயகியாக நடிக்கும் ஹிந்தி நடிகை நித்தி அஹர்வால் படத்தில் உள்ளார் என்பதை மட்டுமே கூறவேண்டும். இயக்குனருக்கு அவர்மீது என்ன கோபமோ தெரியவில்லை,நாயகன் பின்னாடியே அலைந்து கொண்டு திரிவதைத் தவிர,இப்படத்தில்
நித்தி அஹர்வால் பெரிய அளவில் பேசும்படியான வாய்ப்புகள் மிக மிக அரிது.சில இடங்களில் இந்தியன் படத்தின் சாயல் தெரிகின்றது. எனினும் படத்திற்கு அது தேவை என்பதையும் மறுப்பதற்கில்லை. மண்வளத்தையும்,நீர்வளத்தையும் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற நல்ல கருத்தை இப்படத்தின் மூலம் பறைசாற்றியுள்ளனர்.சுப்பர் மார்க்கெட்டில் இலவசமாக வழங்கப்படும் பொருட்களை தீயிட்டு கொழுத்தும் காட்சி தேசிய உணர்வை வரவழைக்கின்றது.இளைஞர்களின் நாட்டுப்பற்றுக்கு இக்காட்சியும்,இப்படமும் உந்து சக்தியாக இருப்பது பாராட்டுக்குரியதே. பொருட்களை தீயிட்டு கொழுத்தும் காட்சி பழைய படமான “கப்பலோட்டிய தமிழன்”படத்தை ஞாபகம் கொள்ளச் செய்கின்றது. விளைந்த காய்கறிகளை உடனடியாக வண்டிகளில் ஏற்றி விற்கும் காட்சி நம்பக்கூடிய வகையில் இல்லை, இருப்பினும் படத்தின் வேகம் கருதி இக்காட்சி அமைந்துள்ளது.மொத்தத்தில் விவசாயம்.நீர்வளம் போன்ற தேசிய பிரச்சினைக்கு ஓர் தீர்வு கண்டு கோர்ப்பரேட்காரர்களிடம் இருந்து தேசத்தை மீட்க வேண்டும் என்ற நல்ல கருத்தை வலியுறுத்தும் படம்.தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் இத்தருணத்தில் “பூமி”வெளியானது பொருத்தமாக உள்ளது என்பது என் கருத்து .படத்தின் மையக்கரு தேசியப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியிருப்பதால் எதிர்காலத்தில் “பூமி”படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
(விமர்சனம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.)

செய்தியாளர் விக்னேஸ்வரன்