அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்பு.

அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன். அவருடன் துணை அதிபராக தமிழ் வம்சாவளியினரான கமலா ஹாரிஸும் பதவியேற்க உள்ளார்.

ஜோ பைடன் பதவியேற்பிற்காக தலைநகர் வாஷிங்டனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் ராணுவ பாதுகாப்பு வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இந்த 25 ஆயிரம் பேர்களில் 12 பேருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சமூகத் தள பதிவுகள், குறுந்தகவல்கள் மூலம் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கக்கூடும் என்று கருதப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஃபிஐ அமைப்பு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதில் 5 பேர் பலியானார்கள். மீண்டும் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வீரர்களுக்கே தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.