தாதா பாட்டி கண்காணிப்பில் பேரன் பேத்தியின் பாதுகாப்பு?

வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறையுடனும் தாத்தா -பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள். தாத்தா – பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள்.

பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள். வயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா – பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும்.

செய்தியாளர் ரவூப் தமிழ்மலர் மின்னிதழ்