குற்றப்பத்திரிகை தாக்கல் – பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரிகளுக்கு பல கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து செங்குன்றம் குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில் குட்கா ஊழல் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு மாதமும் குட்கா விற்பனைக்காக யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றி டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள் சிலரது பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்த விவகாரம் குறித்து முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்திருப்பதை அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனியாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ரூ.246 கோடிக்கு குட்கா உற்பத்தி செய்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட தொழில் அதிபர் விக்னேஷ் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், மேற்படி நபர்களிடம் இருந்து ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றி அரசுடமையாக்க உத்தரவிட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தகவலை அமலாக்கத்துறை இயக்குனரகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் ரஹ்மான்