ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை
சென்னை ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில்: ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு இருப்பதால், பெரும்பாலான பயணியர் பட்டாசு கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை; சிலர் விதிகளை மீறுகின்றனர். இதனால், அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணியருக்கும் ஆபத்து ஏற்படுத்துகிறது.
எனவே, விதியை மீறி பட்டாசு கொண்டு சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாக பிடிபட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கும் நிலையில், அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு கூறினர்.