இன்று(19.01.2021) “சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்” அவர்களின் 88 ஆம் ஆண்டு ஜனன தினம்.


தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த நாயனார் அவதரித்த சீர்காழி பதியில் 19.01.1933 அன்று எளிய மிட்டாய்க்கார குடும்பத்தில் சிவசிதம்பரம்,அபயம்பாள் இணையருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் கோவிந்தராஜன். சிறு வயதிலிருந்தே சங்கீதம்,நாடகம்,இசையிலும்,நடிப்பிலும் பெரும் ஆர்வம் கொண்டவர் இவர்.
தேவி நாடக சபாவில் இணைந்து இசை நாடகம் என சில காலம் பொழுதைக் கழித்த கோவிந்தராஜன்,பின் சேலம் மொடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக மாதச்சம்பள அடிப்படையில் பணியாற்றினார்.இவரின்.வாழ்க்கை பாதை முட்கள் நிறைந்தது.படிப்படியாக முன்னேறி தமிழ் இசைக்கல்லூரியில் இசைமணி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று
சென்னை மத்திய அரசு கலைக்கல்லூரியில் சங்கீத வித்வான் பட்டம் பயின்று தனது தகுதியை திறம்பட
வளர்த்துக்கொண்டார்.சீர்காழி கோவிந்தராஜன் கர்நாடக சங்கீதம்,இசை நாடக சங்கீதம்,பக்தி இசை,மெல்லிசை,சினிமா இசை,-கிராமிய இசை என அனைத்திலும் தனி முத்திரை பதித்து சிறப்பு பெற்றவர். சினிமாவில் பின்னணி பாடகராக சுமார் 16000 பாடல்கள் பாடியுள்ளார் சீர்காழி கோவிந்தராஜன்.
சிவாஜி கணேசன்,எம்ஜியார்,
எஸ்.எஸ்.ராஜேந்திரன் ,முத்துராமன்,
என்.டி.ராமராவ்,வி.நாகையா ரஜினிகாந்த்,பாண்டியன் போன்ற நடிகர்களுக்கு பின்னணி பாடியுள்ளார்.
தனது வெண்கலக்குரலால் ஆலயங்களில் இவர் இசைக்கச்சேரி நடாத்தும் பொழுதுகளில் இறைவனே இறங்கி வந்து விடுவதைப்போல் பிரமை ஏற்படும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் கண்ணியம் மிக்க வரிகளை கொண்டதாக இருக்கும். நல்ல தரத்தில் அமைந்த பாடல்களுக்கு மட்டுமே பின்னணி பாடும் கொள்கையைக் கொண்டவர் சீர்காழி கோவிந்தராஜன். தமிழ் நாட்டில் காமராஜர்,அண்ணா போன்றோர் தலைமையில் நடைபெற்ற காவல்துறை மாநாடு,உலகத்தமிழ் மாநாடு,போன்ற மிக முக்கியமான நிகழ்வுகளில் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரி கண்டிப்பாக நடைபெறும்.மக்கள் திலகம் எம்ஜியார் முதலமைச்சராக இருந்தபோது சீர்காழி கோவிந்தராஜன் அரசவை கலைஞராக இருந்தார்.இவர் தொகுத்துப்பாடிய திருக்குறள் இசைதட்டு வெளியீடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றதை தன் வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதியவர்
சீர்காழி கோவிந்தராஜன்.காஞ்சி காமகோடி பீடம்,குன்றக்குடி ஆதீனம்,தர்மபுர ஆதீனம் போன்ற ஆன்மீக பீடங்களின் இசைப்புலவர் பட்டங்களைப்பெற்றவர்.கடைசி வரை அரசியல் சாயமின்றி எல்லாத் தலைவர்களிடத்திலும் சமமாகப் பழகி பண்பைப் பேணியவர் சீர்காழி கோவிந்தராஜன். உலகில் பல்வேறு நாடுகளில் தனது இசைப்பங்களிப்பை வழங்கியுள்ளார்.

செய்தியாளர் விக்னேஸ்வரன்