நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க
நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதமாகும். மார்கழியை விட புரட்டாசியையே பெருமாளுக்குரிய மாதமாக பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள். அதோடு இது முன்னோர்களை வழிபடுவதற்கான மகாளய அமாவாசை, அம்பிகை வழிபாட்டிற்குரிய நவராத்திரி ஆகியவற்றை கொண்ட மாதமாகும். இதனால் இது வழிபாட்டிற்குரிய மாதமாகவும், உயர்வான புண்ணிய பலன்களை தரக் கூடிய மாதமாகவும் கருதப்படுகிறது.
அத்தகைய புரட்டாசி மாதம் பிறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஆகையால் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, இன்று இறைச்சி கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். காரணம் புரட்டாசி வந்துவிட்டால், பலரும் அசைவம் சாப்பிடமாட்டர்கள். மீன்பிடி துறைமுகங்களிலும் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் போட்டி போட்டு பல்வேறு வகையான மீன்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரிய வகை மீன்கள் மற்றும் சிறிய வகை மீன்களின் வரத்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் அதிகமாகவே காணப்பட்டது. மீன் பிரியர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் என ஏராளமானோர் மீன் வாங்குவதற்காக வந்ததால் இன்று காசிமேட்டில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
வஞ்சிரம் – ரூ.1000, கொடுவா – ரூ. 900, பால் சுறா – ரூ. 500, சங்கரா – ரூ. 600 பாறை – ரூ. 600, இறால் – ரூ. 400, நண்டு – ரூ. 300, நகரை – ரூ. 300, பண்ணா – ரூ.300 காணங்கத்தை – ரூ.300, கடும்பா – ரூ.200, நெத்திலி – ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.