மணிப்பூருக்கு மோடி செல்லாதது

மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூருக்கு மோடி செல்லாதது குறித்து முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரு சமூகத்தினர் இடையே நடந்து வன்முறையால், 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், ‘பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும்’ என்று விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் நிலவரம் குறித்து மணிப்பூர் முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கே அளித்த பேட்டியில், ‘மணிப்பூர் மக்களை மோடி ஏமாற்றிவிட்டாரா? என்று கேட்கின்றனர். நான் அவ்வாறு நினைக்கவில்லை. நிலைமை மோசமான நேரத்தில் பிரதமர் மோடி பிரான்சில் இருந்தார். அவர் நாடு திரும்பிய பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரவை கூட்டி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு சமூகங்களைச் சேர்ந்த பலரை சந்தித்துள்ளேன். பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லாததால் மாநில மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மணிப்பூர் மக்கள் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறார்கள். அங்கு நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளால் மக்கள் அவரை மதிக்கின்றனர்’ என்று கூறினார்.