இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இன்று காலை மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சேலம் கோரிமேடு பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளி ஈரோடு சேனாபதி பாளையத்தில் உள்ளது. இந்த பள்ளியை அவரது மகன் சிவகுமார் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியின் இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளியில் இருந்து செல்போன் மூலமாக குறுந்தகவல் அனுப்பப்பட்டதால் ஏற்கனவே பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

அதே போல் பள்ளி வாகனத்தின் மூலமாக அழைத்து வரப்பட்டிருக்கும் மாணவர்களும் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் விடுதியில் உள்ள மாணவர்களை பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். மோப்ப நாய் பிரிவுகளும் அதே போன்று வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதுமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல் சேலத்தில் கன்னங்குறிச்சி அடிவாரத்தில் இருக்கக்கூடிய இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சியில் இருக்கக்கூடிய பள்ளிக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரிக்கு மொத்தமாக 25 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு சொந்தமான 3 பள்ளிகளும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழ்நிலையில் பள்ளியின் தாளாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் படிக்கக்கூடிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் காலையிலேயே பள்ளிக்கு வந்துள்ள நிலையில் 9 மணி அளவில் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டு பள்ளி முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மெட்டல் டிடக்டர் மூலமாக போலீசார் முழுமையாக சோதனை நடத்தி வருகின்றனர்