ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணி, பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பணிகளாலும் குடியிருப்பு பகுதிகளில் தோண்டிய பள்ளங்களாலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது.
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கிய பின் ஒவ்வொரு பகுதியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். புதிதாக அமைக்க வேண்டிய சாலைகள் என ஆய்வு செய்யப்பட்டதில் 2118 சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகஸ்ட்டில் தொடங்கியபின் வடகிழக்கு பருவ மழையின் போது பணிகள் நிறுத்தப்படும்; சூழலுக்கேற்ப பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு பின் ஜனவரி மாதம் தொடங்கி பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது