தமிழக அரசு அனுமதி 10 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம்!

உலகப்புகழ் பெற்றது மதுரை ஜல்லிக்கட்டு. தமிழ் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டை பார்க்க உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருவர். ஆனால் இந்தாண்டு கொரோனா என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஆளுநர்அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை.

தேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்); சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது, என அதில் கூறப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.