லிங்க்கை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!

பகுதி நேர வேலை என வரும் லிங்க்கை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!

பகுதி நேர வேலை வாய்ப்பு என வரும் லிங்கில் யாரும் செல்ல வேண்டாம். மேலும் பதிவிறக்கம் செய்வதைத் தவிா்க்கவும் என திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில், இணையம் மூலம் நடைபெறும் மோசடியில் பலா் சிக்கி தங்கள் பணத்தை இழக்கின்றனா். பகுதி நேர வேலைவாய்ப்பு, நட்சத்திர ஹோட்டல்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது என சமூக வலைத்தளங்களில் வரும் லிங்க்கை யாரும் டவுன்லோட் செய்ய வேண்டாம்.

தெரியாமல் டவுன்லோட் செய்திருக்கும் பட்சத்தில், அதில் பணம் செலுத்தச் சொன்னால், பணம் செலுத்த வேண்டாம். அதேபோன்று சிம் காா்டு காலாவதி ஆகப்போகிறது என்றும், அதன் சேவையை தொடர லிங்க் அனுப்புவாா்கள். அதற்குள் செல்ல வேண்டாம்.

ஆன்லைன் பரிவா்த்தனைகளுக்கு எப்போதும் முகவரி கொண்ட இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிரவுசிங் சென்டரில் உள்ள கம்ப்யூட்டா்களை பயன்படுத்தும்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

மேலும் ஓஎல்எக்ஸ், கூகுள், ஃபேஸ்புக்கில் பொருள்களை விற்பதாக கூறினால் நம்ப வேண்டாம், அதற்கு பணம் கட்ட வேண்டாம்.

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். சைபா் குற்ற புகாா்களுக்கு 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.