பைக் மீது ரயில் மோதி விபத்து
குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு தண்டவாளத்தை கடந்தபோது பைக் மீது ரயில் மோதி விபத்து
குறிஞ்சிப்பாடி அருகே தண்டவாளத்தை கடந்து சென்ற பைக் மீது ரயில் மோதியது. இதில் பைக்கில் வந்த வாலிபர் மற்றும் ரயிலில் பயணம் செய்த 500க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தோப்புக்கொல்லை கிராமத்தில் ரயில்வே பாதை அருகில் இருபுறமும் குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த ரயில்வே பாதையை கடந்து செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று காலை 10 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த சிவபாலன் மகன் மயிலாடுதுறையில் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நரசிம்மன்(21) என்பவர் பைக்கில் வந்தார்.
ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது, கடலூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயில் வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நரசிம்மன், திடீரென பைக்கை தண்டவாளத்தில் போட்டுவிட்டு தப்பியோடினார். வேகமாக வந்த ரயில், பைக் மீது மோதியது. இதில் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பைக் நொறுங்கி, தண்டவாளத்தின் இருபுறமும் சிதறியது. இதன் பிறகு ரயில் நின்றது.
இது குறித்து ரயில் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடலூர் துறைமுக ரயில்வே நிலைய எஸ்ஐ புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி, தண்டவாளத்தில் கிடந்த பைக்கை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தில் சிவபாலன் மற்றும் ரயிலில் பயணம் செய்த 500க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து காரணமாக ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இது குறித்து கடலூர் துறைமுக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்