ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததும் விசாரணையில் அம்பலம்
சென்னை: பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக, கைது ெசய்த பெண் புரோக்கர் நதியா வீட்டில் நடந்த என்ஐஏ சோதனையில் 17 சிறுமிகளின் 170 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பவர் நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போடாத ஆளுநரை கண்டித்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்தனர். அதேநேரம் இந்த வழக்கை என்ஐஏ தானாக முன் வந்து பதிவு செய்து விசாரணை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும், ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். அதில் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இது போல் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் ரவுடி கருக்கா வினோத் தொடர்புடைய நபர்கள் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தினர். அதில் தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த நதியா(37) நெருங்கிய தொடர்பில் இருந்தது என்ஐஏ விசாரணையில் உறுதியானது. மேலும், கருக்கா வினோத்தை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறையில் இருந்த போது அவரை பல லட்சம் செலவு செய்து நதியா ஜாமீனில் எடுத்ததும் உறுதியானது.
அதைதொடர்ந்து நதியா தொடர்பான விபரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். அதில், நதியா ரவுடி கருக்கா வினோத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டு பாலியல் தொழில் மற்றும் மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் என்ஐஏ அதிகாரிகள் ரவுடி கருக்கா வினோத்தின் நெருங்கிய தோழியான நதியா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நதியா பயன்படுத்திய 5 செல்போன்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 17 பள்ளி மாணவிகளின் 170 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு வியந்தனர். பிறகு என்ஐஏ அதிகாரிகள் பள்ளி மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன்மீது டிஜிபி சங்கர் ஜிவால் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி மற்றும் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான இன்ஸ்பெக்டர் செல்வராணி குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தி, பெண் பாலியல் புரோக்கர் நதியாவை கையும் களவுமாக கைது செய்தனர். தனது மகள் மூலம் சக பள்ளி மாணவிகளை அழைத்து வந்து பல ஆசைகளை தூண்டி பாலியல் தொழிலில் தள்ளியதற்கு உடந்தையாக இருந்த நதியாவின் சகோதரி சுமதி(43), சுமதியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன், மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த கோவையை சேர்ந்த அசோக்குமார், சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் உட்பட 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பள்ளி மாணவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் நல குழு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களை பட்டியலெடுத்து ரகசியமாக தனது விசாரணையை குழந்தைகள் நல குழு நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துடன் இணைந்து நதியா பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் என்ஐஏ சோதனையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.