ஜி.எஸ்.டி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஜி.எஸ்.டி., வழக்குகளில் கைது தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: ‘எல்லா ஜி.எஸ்.டி., வழக்குகளிலும் கைது நடவடிக்கை தேவையற்றது. குற்றம் தொடர்பாக நம்பகமான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும்’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரிகளின் குறிப்பிட்ட பிரிவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என 281 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, எம்.எம். சுந்தரேஷ், பீலா திரிவேதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நேற்று நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி.,யின் ஒவ்வொரு வழக்கிலும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. விசாரணையை முடிக்க கைது செய்யப்பட வேண்டும் என சட்டம் கூறவில்லை. சட்டத்தின் நோக்கம் அது கிடையாது.

நம்பகமான ஆதாரங்கள் மற்றும் உறுதியான ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை இருக்க வேண்டும். சட்டம் சுதந்திரத்தை உயர்ந்த பீடத்தில் வைத்துள்ளது. அதை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது.

ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரிகள் சட்டப்பிரிவில் உள்ள கைதுக்கான காரணங்கள் மற்றும் குற்றம் நடந்திருக்கக் கூடும் என நம்பும் காரணங்கள் குறித்து நீதிமன்றம் ஆராயும்.

ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மிக கடுமையாக நடந்த சம்பவங்களும் உள்ளன, அதே போல் வரி செலுத்துவோர் மோசடியில் ஈடுபட்ட வழக்குகளும் உள்ளன. தீர்ப்பு வழங்கும் போது அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.